Monday, 12 January 2026

இலக்கிய உத்தியின் இந்நாட்டவர் கருத்து

இலக்கிய உத்தி என்று தொல்காப்பியர் தனியாக எதுவும் கூறவில்லை. அந்தக்கலைச் சொல்லை அவர் ஆளவில்லை. யாப்பு, வண்ணம் என்ற உத்திகள் குறித்து அவர் விரிவாக விளக்குகிறார். இலக்கியத்தின் (கவிதையின் ) உள்ளடக்கம், வடிவம், உத்தி குறித்து அவர் விரிவாகப் பேசுகிறார்.

எனவே தமிழ் மரபில், கவிதை இலக்கியம் நன்கு செழித்து வளர்ந்திருந்தது. அதனால் தொல்காப்பிய இலக்கணம், இலக்கிய வகை, அதன் உத்திகள் குறித்து விரிவாக விளக்கி உள்ளது. குறிப்பாக யாப்பினுடைய மிக அடிப்படையான உறுப்பாகிய எழுத்து, அதற்குரிய ஒலி அளவு (மாத்திரை) பற்றி விளக்குகிறார்.

இது உத்தி குறித்த நுட்பமான அவருடைய புலமையைக் காட்டும். அத்துடன் வாய்மொழி இலக்கிய வகைகளான விடுகதை, பழமொழி, பண்ணத்தி என்ற இசைப்பாட்டு ஆகியவை குறித்தும், அவைகளின் உத்திகள் பற்றியும் விளக்கி உள்ளார்.

உரையாசிரியர்கள், நன்னூலார், பாட்டியல் நூலார் தொடங்கி வீரமாமுனிவர் (சதுரகராதியின் ஆசிரியர்) ஆகிய அனைவரும் உத்திகள் குறித்து விளக்கி உள்ளனர். அதுபோல உரைநடை இலக்கிய வகைகளுக்குரிய உத்திகளைத் திறனாய்வாளர்கள் விளக்கி உள்ளனர். எனவே நம் மரபில் உத்திகள் பற்றிய தெளிவான சிந்தனையும் இலக்கணமும் உள்ளன.

முன்னரே கூறியபடி, பாட்டு, நாடகம், காப்பியம் ஆகியன பழைய இலக்கிய வகைகள் கவிதைக்குரிய உத்திகள் குறித்து மிக விரிவாகத் தொல்காப்பியச் செய்யுளியல் கூறுகிறது. நன்னூல் நூலுக்குரிய உத்திகளாக 32 வகைகளைக் கூறுகிறது. கவிதையில் அமைந்த இலக்கிய வகைக்குரிய உத்திகளாக இவற்றை நாம் கொள்ள வேண்டும்.

 பனுவல் (Text) என்ற கலைச் சொல்லைத் தொல்காப்பியம் கூறுகிறது. நூல், பனுவல் இரண்டும் ஒன்று. முதலிலிருந்து முடிவு வரை எந்த விதமான மாறுபாடும் இல்லாமல் பொருள் நுட்பத்துடன் நூல் அமைய வேண்டும் ஒரே சீராக என்று தொல்காப்பியம் விளக்குகிறது.

 முதலிலிருந்து முடிவு வரை ஒரே சீராக அமைவது என்ற கருத்து உள்ளடக்கம், அதைச் சொல்லும் முறை என்பவை குறித்த உத்திகளாகும். அதேநேரத்தில் முழுமை என்பதையும் ஒருநீர்மை (consistency) என்பதையும் இந்த விளக்கம் கூறுகிறது. இவை இரண்டும் உள்ளடக்க வெளிப்பாட்டிற்கான உத்திகளாகும்.

படிக்கும் வாசகர் நிலையில், இலக்கியம் புரிதலுக்கான மிக அடிப்படையான உத்திகள் இவை, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் மரபில் இலக்கிய உத்திகளைக் குறித்து அதுவும் வாசகர் நிலையில் நின்று எவ்வளவு நுட்பமாக உத்திகளைப் பற்றி விளக்கி உள்ளனர் என்பது அறியத்தக்கது.

உரைநடையில் அமைந்த புனைகதை, புனைகதை அல்லாத இலக்கியங் களுக்குரிய உத்திகளைத் திறனாய்வாளர்கள் விளக்கி உள்ளனர். புனை கதைக்குரிய கதை கூறும் முறையில் பின்னோக்கு உத்தியைச் சிலப்பதிகாரத்தில் (காப்பியம்) இளங்கோ மிக நுட்பமாகக் கையாண்டு உள்ளார்.

திறனாய்வு செய்வோர் இலக்கிய உத்திகள் குறித்து மேனாட்டார் கருத்துக்களை அப்படியே பின்பற்றாமல், நம் மரபிலுள்ள கருத்துக்களுடன் அறிய வேண்டும். மிகப் பழைய காலத்திலே, பின்னோக்கு உத்தி ஆளப் பட்டிருப்பது, உத்தி குறித்த நம்நாட்டார் சிந்தனை வளத்தைக் காட்டும். அதுபோலக் கடித வழி கதை கூறல், கனவு, கிளைக் கதை, காப்பிய ஆசிரியன் குரல் (Epic voice) என்ற உத்திகளையும் சிலப்பதிகாரத்தில் நாம் காணலாம்.

இலக்கிய உத்தியின் பகுப்பு

கவிதை, காப்பியம் ஆகிய பழைமையான இலக்கிய வகைகள் நம் மரபில் இருந்தன. ஒரு கருத்து அல்லது ஓர் உணர்ச்சியை வெளியிடுவதாகக் கவிதை தன் உணர்ச்சிப் பாட்டு அமைந்தது.

 ஒருவகையில் சிறுகதை போன்றது இது. கவிதைக்குரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் யாப்பிற்குரிய உத்திகள், எடுத்துரைக்கும் உத்திகள், மொழிசார்ந்த (சொல், பொருள், ஒலி, எழுத்து என்பன) உத்திகள் என்று கவிதை உத்திகளைப் பாகுபடுத்தினர்.

 இதனால், தொல்காப்பியம் தொடங்கி தன் உணர்ச்சிப் பாட்டு, காப்பியம், நாடகம் போன்ற தமிழ்க் கவிதை, கதை இலக்கியம் சார்ந்த உத்திகளைக் கூறி வந்துள்ளனர் என அறியலாம்.

பெரும்பாலும் கருத்தை முதன்மைப்படுத்தி, அதை அழகாகவும், குறிப்பாகவும் கூறும் உத்திகளை வகுத்தனர். கவிதை, படிப்பவரிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வாசகர் நிலையிலிருந்து ஆற்றலுடன் கவிதை. கருத்தை வெளிப்படுத்தும் முறையை உத்தியாக விளக்கினர்.

இலக்கியத் திறனாய்வில் இது பெரும் சாதனை. கவிதை இலக்கியம் படிப்பவருக்குக் கருத்தை வலிமையுடன் கூறுவதற்குத் துணை செய்யும் நெறிமுறை உத்தி என்று அடிப்படை விளக்கம் வகுத்தனர். நம் முன்னோர். அதற்கேற்ப உத்திகளைப் பாகுபடுத்தினர்.

பாட்டியல் நூல்களில் யாப்பு சார்ந்த உத்திகளையும் கூறும் முறை சார்ந்த உத்திகளையும் எண் அடிப்படை உத்திகளையும் கூறினர். புனைகதை, புனைகதை அல்லாத உரைநடைகளுக்குரிய உத்திகளைத் திறனாய்வாளர்கள் பெரும்பாலும் மேனாட்டார் மரபிலிருந்தே பகுத்துக் கூறி, விளக்கினர். ஆயினும் நம் மரபிற்குரிய தனித்தன்மை வாய்ந்த உத்திகளையும் கூறினர்.

Comments


EmoticonEmoticon